பனிப் பிரதேசத்தில் வசிக்கும் எட்டி உயிரினம் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
இமாலய பிரதேசமான நேபாளம் மற்றும் திபத் பகுதிகளில் எட்டி உயிரினம் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த உயிரினம் பார்ப்பதற்கு மனிதர்கள் போன்று இருக்கும். இந்த உயிரினம் இமயமலைக் காடுகளில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எட்டி குறித்த ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் நேபாள நாட்டைச் சேர்ந்த மக்கள் எட்டியை நேரில் பார்த்ததாகவும், மனிதர்களை விட உருவத்தில் பெரிதாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு மாகலூ பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பனிமலையில் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்ட தனி மனிதனின் கால் தடத்தை செல்போனில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து மாகலூ பரூண் தேசிய பூங்கா அருகே பனி மனிதர்களை பார்த்ததாகவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை நம்ப மறுத்து சிலர் இந்திய ராணுவத்தினரின் ட்விட்டர் அக்கவுண்ட்டை ஹேக் செய்துவிட்டதாகவும் அப்போது தகவல்கள் பரவியது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எரிக் ஷிப்டன் எனும் ஆய்வாளர் எவரெஸ்ட் உச்சிக்கு செல்வதற்கு மாற்றுப் பாதையை தேடிக் கொண்டிருந்தபோது பனி மனிதனின் கால் தடங்களை பார்த்ததாகவும் கூறியிருந்தார். இந்த எட்டி உயிரினம் குறித்து நாட்டுப்புறக் கதைகளிலும் இருக்கிறது. மேலும் எட்டி பற்றிய ஆதாரங்களை சேகரிப்பதற்கான தேடுதல் வேட்டை இன்றுவரை நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.