உலக அதிசயங்களில் ஒன்றான பைசா கோபுரம் முழுமையாக சாய விடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இந்த கோபுரம் விழாமல் இருக்க 4 டிகிரி சாய்வாக கோணத்தில் காட்சியளிக்கும் 850 வருட பழமையான பைசா கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்று. இப்படிப்பட்ட பைசா கோபுரத்தை மிஞ்சும் பரமசிவனையும் தமிழையும் மையமாகக்கொண்டு கட்டப்பட்டுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் உலக அதிசயங்களை மிஞ்சும் அதிசயம் தான்.
தஞ்சாவூரில் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் ஆலயம் என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. 1003- க்கும் 1010- க்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் திராவிட கோவில் கலையின் உண்ணதமான சான்றாக கருதப்படுகின்றது. இந்த கோவிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் பெரும்பாலான பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை இந்த கோவில் பெற்றுள்ளது.
தற்போது இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலின் தலைமை சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்றபெயர் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது. பிற்கால கோவில்களில் கோபுரங்கள் உயரமாக அமைந்திருக்கும் நிலையில் இந்த கோவிலில் விமானம் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு கீழே உள்ள பகுதி ஒரே கல்லால் ஆனது.
விமான நிழல் தரையில் விழாது என்றெல்லாம் கூறப்பட்டாலும் அது உண்மையல்ல. பரமசிவனையும் தமிழையும் மையமாகக்கொண்டு கட்டப்பட்டு ஆயிரம் வருடங்கள் கடந்தும் 6 முறை நிலநடுக்கம் கண்டும் அசையாமல் அப்படியே நிற்கும் இந்தக் கோவில் கல்லில் வடித்த காட்சிப்பொருள், காலமே கண்டு வியக்கும் தமிழினத்தின் சாட்சி பொருள் இது தான். உலக அதிசயங்களை மிஞ்சும் உயர்ந்த அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில்.