காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சில தினங்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு வருகின்ற நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணபடுகிறது. இதற்கிடையில் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான ஓசூர், பிலிகுண்டுலு, அஞ்செட்டி, ராசிமணல், நாட்றாபாளையம், கேரட்டி உட்பட பல பகுதியில் பெய்த தொடர் மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த 30ஆம் தேதி ஒகேனக்கல்லில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர்வரத்து உயர்ந்துள்ளது. மேலும் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட பல அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைத்தொடர்ந்து தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.