Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி…. மக்களின் கருத்து கணிப்பு என்ன?…. வெளியான தகவல்….!!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இது தொடர்பாக “மாற்று கொள்கைக்கான மையம்” என்ற அமைப்பு இலங்கை முழுதும் கருத்து கணிப்பு நடத்தியது. அப்போது 88 % பேர் தாங்களோ (அல்லது) தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், பால் பவுடர், உரம் ஆகிய அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து 10ல் 9 பேர் தங்களது வருமானமோ (அல்லது) தங்கள் குடும்ப உறுப்பினரின் வருமானமோ பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மொத்த இலங்கை மக்களில் பாதிப் பேர் ஏதேனும் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு இருப்பது தெரியவந்தது.

இப்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபயராஜபக்சே அரசே காரணம் என மக்கள் ஒருமித்த கருத்துடன் கூறினர். இதற்கிடையில் 62 % பொதுமக்கள் அதிபர் அரசினுடைய தவறான பொருளாதார கொள்கைகளை குற்றம்சாட்டினர். அத்துடன் 14.5 % பேர் சுதந்திரத்துக்கு பிந்தைய அனைத்து அரசுகளின் தவறான ஆட்சி முறையையும், 14.4 சதவீதம் பேர் நாட்டின் ஊழல் அரசியல் கலாசாரத்தையும் குறை கூறினார்கள். அதன்பின் 10ல் 9 பேர் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனவும் ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலிலிருந்து விலக வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். 87 % பேர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இவ்வாறு கருத்து தெரிவித்தவர்களில் 3 வருடங்களுக்கு முன் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஓட்டுப் போட்ட பெரும்பான்மை சிங்களர்களும் அடங்குவர். ஆகவே பொருளாதார சிக்கல்களிலிருந்து தங்களை மீட்பதற்கு ராஜபக்சே குடும்பத்தால் இயலாது என அனைத்து இனத்தினரும் கருதுவது தெரியவந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் 58 % பேர் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கு நீண்டகாலம் ஆகும் எனவும் 14 % பேர் சிறிதுகாலம் ஆகும் எனவும் 2 சதவீதம் பேர் மட்டும் விரைவிலேயே பொருளாதாரம் மீண்டெழும் எனவும் கருத்து தெரிவித்தனர். இதனிடையில் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என தெரியாது என்று 26 % பேர் தெரிவித்தனர். அத்துடன் 96 % பேர் அனைத்து கட்சி அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு மேற்கொண்டு, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

Categories

Tech |