மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மாமனாரை தாக்கிய மருமகன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சகானாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக சகானா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் தனது மாமனார் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு தனது மனைவியை அழைத்துள்ளார். ஆனால் சகானா அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜேஷ் தனது உறவினர்களுடன் இணைந்து ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.