டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதிகள் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மதுவிலக்கு இணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி, டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயமாக காக்கி சட்டை அணிந்து, தலைமுடிகளை நேர்த்தியாக வெட்டி, காதில் கடுக்கன், கம்மல் போன்றவற்றை அணியாமல் அனைவரும் மதிக்கத்தக்க வகையில் “ஜென்டில்மேன்”போன்று இருக்க வேண்டும். மேலும் அனைவரும் தங்களின் ஆட்டோக்களில் பெயர், செல் நம்பர் கட்டாயமாக எழுதி வைக்க வேண்டும் எனவும், மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டக் கூடாது. அப்படி ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் அனைத்து ஆட்டோ சங்கங்களின் உறுப்பினர்களும் தங்களது விவரங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனையடுத்து வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் போதை பொருட்கள் வைத்து இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அனைவரிடமும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும் அடுத்த ஜூலை மாதம் முதல் மாமல்லபுரம் நகர், கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் 24 மணி நேரமும் உங்களை கண்காணிப்பார்கள். எனவே நீங்கள் அனைவரும் செஸ் ஒலிம்பியாட் முடியும் வரை எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.