உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில்களில் ஒன்று, வந்தே பாரத் ரயில் ஆகும். இந்தியாவில் வந்தே பாரத் ரயில் மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வந்தே பாரத் ரயிலானது மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் 1,100 பயணிகள் வரை இதில் செல்ல முடியும். இந்நிலையில் டெல்லி முதல் வாராணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை 2 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த வந்தே பாரத் ரயில், முதன் முதலாக சென்னையில் உள்ள ஐ.சி.எப் என்ற தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்த, 18 மாதங்களுக்குப் பின், ரூ.100 கோடி செலவில் இந்த வந்தே பாரத் ரயில் திட்டமானது உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இயக்கப்பட்டு வரும் இந்த வந்தே பாரத் ரயிலானது, 16 பெட்டிகளை கொண்டதாகும். மேலும் 14 சேர்கார் பெட்டிகளையும், மேலும் 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டிகளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமாநிலங்களில் மட்டும் இயக்கப்பட்டு வரும் இந்த சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. முக்கியமான நிலையங்களில் மட்டும் இந்த ரயில்கள் நின்று செல்லும். இவ்வாறு 13 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தெற்கு ரெயில்வேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ரயில்வே வாரியம் இதனை ஒதுக்கி செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் சென்னைக்கு 6 ரயில்கள், கோவைக்கு 3 ரயில்கள், திருச்சி, திருவனந்தபுரத்திற்கு தலா 2 ரயில்கள் என மொத்தம் 13 வந்தே பாரத் ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தென் மாநில தலைநகரங்களை மையமாக கொண்டு இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரிமியம், சதாப்தி, ராஜ்தானி, தூரந்தோ ரயில்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
மேலும் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளதாவது, இந்த 13 புதிய ரயில்களுக்கான பெட்டிகள் வந்துள்ளன. இவற்றை எப்போது இயக்க வேண்டும் என்ற தகவலானது, இன்னும் ரயில்வே வாரியத்திடம் இருந்து வரவில்லை. ஆகவே சென்னையில் இருந்து எந்தெந்த நகரங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும் என்ற தகவல் உறுதி ஆனவுடன் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.