கொரோனா தொற்றின் 4-வது அலை ஜூன் மாதத்திற்கு பிறகு உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா நான்காம் அலை ஜூன் மாதத்திற்கு பின் உச்சத்திற்கு சென்று அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக துல்லியமாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐஐடி சென்னை உள்ளிட்ட இடங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்ததாவது “நோய் தொற்று எண்ணிக்கை குறித்து தினமும் ஆய்வு செய்து வருகிறோம். தொற்று எண்ணிக்கை அதிகமாக உயரும் போது கண்டிப்பாக அரசே மக்களுக்கு அவசியமான தகவலை தெரிவிக்கும். அச்சமூட்டும் வகையில் தற்போது எங்கும் பாதிப்புகள் இல்லை. நான்காவது அலை வருகிறது என்று கணக்கிடப்படுவது ஒரு வாரத்துக்கு பாதிப்பை வைத்துதான். ஒரு நாள் தொற்று பாதிப்பை வைத்து நம்மால் எதையும் கூற இயலாது. ஏழு நாட்கள் தொடர்ந்து கணக்கிடப்பட்டு அதன்பிறகுதான் கொரோனா தொற்று அலை பற்றி தெரிவிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.