ரேஷன் கடையில் வாங்கும் பொருட்கள் விற்கபட்டால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் அத்தியவசிய பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாகவும் முழுமையாகவும் செல்கிறதா என்பதை உறுதி செய்யும் பொருட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை சரிபார்ப்பு பயோமெட்ரிக் மூலம் விவரங்கள் சரி பார்த்து பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையானது கடந்த 2020 -ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதாவது ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப தலைவர்கள், உறுப்பினர்கள் யாராவது தங்கள் பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் மூலம் ரேசன் பொருட்களை பெறலாம். குடும்ப உறுப்பினர்களை தவிர பிற நபர்களிடம் ஸ்மார்ட் கார்டை கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் ரேஷன் கடைக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் தங்கள் ரேஷன் கார்டில் பொருட்களை பெறுவதற்கு ஒரு நபரை அங்கீகரித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் மூலம் அங்கீகாரம் சான்று பெற்று பொருட்களை பெறலாம்.
மேலும் ஒரு சில நபருக்கு கைரேகை பதிவாகவில்லையென்றால் ஆதாரம் மையங்களுக்கு சென்று தங்கள் கைரேகையை புதுப்பிக்கலாம். இதனையடுத்து ரேஷன் கடை மூலம் பெற்ற பொருட்களை பிறருக்கு விற்கக்கூடாது. அப்படி விற்பனை செய்தால் அவர்களின் ஸ்மார்ட் கார்டுகள் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.