நாளை தொடங்க இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதிலாக 9 மணிக்கு வந்தால் போதும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். அவர்களின் காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத் தேர்வு தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பத்தாம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆறாம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் பிளஸ் 2 பொது தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சரியாக காலை 8 மணிக்கு வர வேண்டும் என்று முன்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கு வந்தால் போதும், எட்டு மணிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறையில் இருந்து திடீர் அறிவிப்பு வந்துள்ளது.