தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கட்டண சீட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதை அடுத்து அந்தத் துறை சார்ந்த 165 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: “திருக்கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் அர்ச்சகர்களுக்கு 60 சதவீதம் பங்கு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பல்வேறு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் ரூபாய் 11 கோடி மதிப்பில் அன்னதானக் கூடங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 10 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவிலில் 108 திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படும். இதற்கான செலவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பக்தர்களிடம் இருந்து பெறப்படும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான 80 கோயில்கள் 100 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.