கார் மரத்தின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வீரவர் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அரச மரத்தினடியில் இருக்கும் சிலைகளுக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது மனைவி மாலதி, மகன் அமிதாப்பட்டு, மருமகள் மற்றும் இரண்டு பேர பிள்ளைகள் ஆகியோருடன் காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தார்.
இந்த காரை ஷாம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீரவர் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பக்தர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்த கோவில் வளாகத்திற்குள் புகுந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாலதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த 6 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.