இந்த உலகில் கண்டங்கள், பெருங்கடல்கள், தீவுகள், தீபகற்பங்கள் மற்றும் பாலைவனங்கள் என பலவகை நிலப்பரப்புகள் உள்ளன. அவை அனைத்தும் இயற்கையால் உருவாக்கப்பட்டவை. குறிப்பாக தீவு என்றாலே அது இயற்கையாக உருவானதாக இருக்கும். ஆனால் இன்று மனிதர்கள் வியக்கத்தக்க செயற்கைத் தீவுகள் பலவற்றை உருவாக்கி உள்ளனர். அவற்றில் ஒன்றுதான் பாம் தீவு. துபாய் இன்று உள்ளாச உலகம் ஆக இருப்பதற்கு முக்கிய காரணம் செயற்கையாக உருவாக்கப்பட்ட பனைமர தீவுகள் தான்.
நம் நாட்டில் கடலில் ஒரு பாலத்தை கட்டுவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் இங்கு கடலில் மண்ணை கொட்டி தீவு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த தீவு தான் “பாம் ஜுமேரா”. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய செயற்கை தீவாகும். இது மூன்று வகை பாம் தீவுகளில் ஒன்று. இந்த தீவு 2021 இல் தொடங்கி 2009ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மணல் மற்றும் பாறைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கடலில் இருந்து இதனை பாதுகாக்க கடலின் நீர் பரப்பிற்கு மேல் பாறைகளால் நிரப்பியுள்ளனர். கடலில் பத்தரை மீட்டர் ஆழத்திற்கு மணல் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டது. ஏறத்தாழ 40 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு இந்த தீவு கட்டப்பட்டது. கரையில் இருந்து கடலுக்குள் ஒன்றரைக் கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைத்து இருபுறமும் பனை மர வடிவில் அமைக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை சுற்றி இருக்கும் பிறை வடிவிலான தீவு மட்டும் 11 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
பிற பகுதிகளுடன் இது சுரங்கப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் செல்பவர்கள் மட்டுமே பனைமர வடிவத்தைப் பார்க்க இயலும். செயற்கைக்கோள் மூலமாக மேலிருந்து வடிவமைப்புகள் பார்த்து பார்த்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பலவகையான குடியிருப்புகள், கடற்கரைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவை இங்கு உள்ளன. தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து செல்கிறார்கள்.