Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் கனமழை… அரசு பேருந்தின் மீது விழுந்த மரக்கிளை… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!

சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் மரக்கிளை முறிந்து அரசு பேருந்தின் மீது விழுந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று முன்தினம் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் திடீரென மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் துறையூர் பேருந்து நிலையம், காவல் நிலையம், துறையூரிலிருந்து முசிறி செல்லும் ரோடு, ஆத்தூர் செல்லும் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே ராட்சத புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் இதில் நரசிங்க புரத்திலிருந்து துறையூரை நோக்கி வந்த அரசு பேருந்து மீது மரத்தின் கிளை விழுந்ததால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தன. உடனே ஓட்டுநர் பிரேமானந்த் சாதுரியமாக பேருந்தை நிறுத்தினார்.

இதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் பயணிகள் மீது தெறித்தது. ஆனாலும் பயணம் செய்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதற்கிடையே அருகே இருந்த மின்மாற்றி மீது புளிய மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துறையூர் பணிமனை மேலாளர் ராஜசேகர் பேருந்தில் இருந்து பயணிகளை இறக்க வேண்டாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் உடனே அங்கு வந்து மின்சாரத்தை துண்டித்ததால் பயணிகள் உயிர் தப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதேபோன்று சூறாவளி காற்று காரணமாக துறையூரில் உள்ள சிவன் கோயில் பெயர் பலகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நகரில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |