சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் உள்ள பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்வது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கன்னியாகுமரி பள்ளியில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை முட்டியிட செய்த விவகாரத்தில் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டதாகவும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்திருப்பதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தாலும் மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும் போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் எடுக்கப்படுவதாக அவர் தனது மனுவில் புகார் தெரிவித்து இருக்கின்றார். இந்நிலையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியில் வரும் போது, ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதி சென்று வரவேற்பதன் மூலமாக மிஷனரிகளுக்கு ஆதரவாகவும், கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசு செயல்படுவது நிரூபணமாவதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
மேலும் மாநில அரசும் அதன் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் எனவும் கன்னியாகுமரி, திருப்பூர் போன்ற இடங்களில் நடந்த மதமாற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி போன்றோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்ஜெ.ரவீந்திரன் ஆஜராகி மனுதாரர் குறிப்பிட்ட திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களை தவிர எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மத மாற்ற சம்பவங்கள் நடந்ததாக எந்த புகாரும் இதுவரை இல்லை என தெரிவித்தார்.
அவ்வாறு புகார் ஏதும் வந்தால் அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், எந்தப் பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் செய்யப்பட்டாது என்ற விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டுள்ளார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மனுதாரர் கோரியபடி வழிகாட்டு விதிமுறைகளை அரசு ஏன் வகுக்கக்கூடாது எனவும், அதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தாலும், மதமாற்றம் செய்வது உரிமை அல்ல எனவும் கூறிய, நீதிபதிகள் வழக்கை விரிவான வாதத்திற்காக நாளை தள்ளி வைத்துள்ளனர்.