சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 1997 ஆம் ஆண்டு குவோ காங்டாங் என்பவரின் 2 வயது மகன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர். கடத்தப்பட்ட தனது மகனை தேடி அவர் மோட்டார் பைக்கில் சீனாவின் 20 மாகாணங்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளார். அப்போது மகனைத் தேடி அலையும் முயற்சியின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இருபத்தி நான்கு ஆண்டுகளில் இவரது 10 இருசக்கர வாகனங்கள் தேய்ந்து போய் உள்ளன.
கடத்தப்பட்ட தமது குழந்தையின் படத்தை வண்டியில் பாதையாக ஏந்திக்கொண்டு தேடி அலைந்த இந்த தந்தை இதற்காகவே தம் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த பணத்தை செலவழித்து உள்ளார். பணம் தீர்ந்து போன நிலையில் பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார். அதன்பிறகு 24 வருடமாக ஒரு தந்தை இப்படி அலைவதை தெரிந்துகொண்ட சீன பொது பாதுகாப்பு அமைச்சகம், சில அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு பிறகு DNA பரிசோதனையின் மூலம் அவரின் மகனை அடையாளம் கண்டுள்ளனர்.
கடத்தல் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அவரின் மகன் அவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். 24 வருட போராட்டங்களுக்கு பிறகு தன் மகனை கண்டுபிடித்து தந்தையின் பாசம் காண்போரை நெகிழ வைத்தது. எந்த ஒரு முயற்சியும் தோல்வியில் முடியாது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.