ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை மாணவிகள் சிலர் தன்னை தாக்கியதாக தடவியல் துறை அலுவலர் லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன்(53). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தடயவியல் துறை அலுவலகராக வேலை செய்து வருகின்றார். அதே மருத்துவமனையில் மருந்தியல் முதலாம் ஆண்டு படிக்கும் முதுகலை மாணவி சரஸ்வதி என்பவர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடும்போது லோகநாதன் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் வருகைப்பதிவேட்டில் முறைகேடு நடக்கிறது என்று புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை துணை முதல்வர் ஜமீலா மாணவி சரஸ்வதியிடம் விசாரணை மேற்கொண்டதில் வருகை பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஜமீலா தலைமையில் குழுவினர் முன் விசாரணைக்கு ஆஜராக நேற்று முன்தினம் லோகநாதன் நிர்வாக அலுவலகத்தில் தன் சக ஊழியர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஸ்டான்லி மருத்துவமனை முதுகலை மாணவிகள் 50 அதிகமானோர் லோகநாதனை சுற்றிவளைத்து தகராறு செய்தனர். அப்போது சில மாணவிகள் அவரை கையால் தாக்கி அவரது செல்போனை உடைத்துள்ளனர். இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் லோகநாதன் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.