கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையிடம் தரையில் அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகில் உஸ்தலப்பள்ளியில் வசித்து வருபவர் வெங்கடேஷ்(30). இவருடைய மனைவி துளசி(27). இவர்களுக்கு 7 வயதுடைய ஒரு ஆண் குழந்தையும், 4 வயதுடைய ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் துளசி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு துளசி தரையில் குழந்தையிடம் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்.
அதன்பின் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியதாவது, எங்களது பெண் குழந்தைக்கு கண்ணில் நீர் வழிந்த நிலையில் இருப்பதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனை அடுத்து பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து பார்த்தபோது, குழந்தைக்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்தனர். அதை அறுவை சிகிச்சை செய்ய ரூ 5 லட்சம் ஆகும் என்று தெரிவித்தனர். கூலி வேலை செய்கின்ற எங்களால் குழந்தைக்கு சிகிச்சை செய்ய பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தைக்கு ஊசி போட்டு வருகின்றோம். அங்கு செல்ல கூட எங்களிடம் வசதி இல்லை. எனவே தமிழக அரசு எங்கள் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்று குறிப்பிடபட்டுருந்தது.