ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூ பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் பிரம்ம கமலம் பூ. பிரம்ம கமலம் அல்லது நிஷா காந்தி என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரக் கூடிய அபூர்வ வகை மலர். இது ஒரு கள்ளி இனத்தை சேர்ந்த செடியாகும். இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது மூன்று விதமான இதழ்களைக் கொண்டு மிக அழகாக இருக்கும். இந்த மலர் பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து சில மணி நேரங்களில் குவிந்து விடும். இந்த வகை தாவரம் தென் அமெரிக்காவின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாக கொண்டுள்ளது. அங்கிருந்து இது உலகமெங்கும் பரவி கிடக்கிறது.
இந்தச்செடி பரவிய இடங்களில் இதனை சுற்றியுள்ளோர் தொன்மங்களும் முளைத்துள்ளன. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று அறியப்படுகின்றது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் காலம் காலமாக கருதி வருகின்றனர். மேலும் ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது சொல்லப்படுகிறது.இயேசு பிறந்த போது அவரை காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இதை அவர்கள் கருதுகின்றனர். இது சமீப காலமாக தமிழ் நாட்டிலும் பரவலாக வளர்கின்றது. இது ஒரு கள்ளி இனத்தை சேர்ந்தது என்பதால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை கொண்ட செடி.