அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டு 27 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி செந்தமிழ் நகரில் வசித்து வருபவர் சித்திரைவேலு. இவர் புதிதாக வீடு கட்டி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்கு வரும் 40 தொழிலாளர்களுக்கு சாப்பிடுவதற்காக அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள பிரியாணி கடையில் வினோத் என்பவர் 40 பிரியாணி பார்சல் களை வாங்கி வந்திருக்கின்றார். இதையடுத்து சித்திரவேலு 40 பேருக்கும் பிரியாணி பார்சல்களை வழங்கியுள்ளார்.
தொழிலாளர்கள் 40 பேரும் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று குடும்பத்தோடு சாப்பிட்டதையடுத்து நேற்று காலை அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. இதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 27 பேருக்கு அறந்தாங்கியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.
இதையடுத்து அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், நகராட்சித் தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் முத்து உள்ளிட்டோர் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்கள். பின் பிரியாணி சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட காரணமாக இருந்த பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தார்கள். இந்நிகழ்வின்போது போலீசார்கள் அதிகாரிகளுடன் உடனிருந்தார்கள்.