ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ 50 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்கள், அலுவலகம், கலையரங்கம் கட்டிக் கொடுக்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகில் உம்மியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள், அலுவலகம், கலையரங்கம் ரூ 50 லட்சத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதை கட்டுவதற்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊர் முக்கிய தலைவர்கள் பன்னீர்செல்வம், மாதையன், முருகேசன், ஆசிரியர் இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் ஆகியோர் பங்கேற்று அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள், கட்டிடங்கள் கட்டிக்கொடுத்த நன்கொடையாளர் களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். அதன்பின் அவர்கள் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் நன்றி தெரிவித்தார்.