3 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தினிப்பாறை கிராமத்தில் கூலித் தொழிலாளியான பூந்துறை(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சக்திபிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சக்திபிரியா இறந்துவிட்டாள். இதனால் குழந்தையை உறவினர்கள் அப்பகுதியில் புதைத்துவிட்டனர்.
இந்நிலையில் தோட்டாக்குடி கிராம நிர்வாக அலுவலர் மதுபாலா குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நாங்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி முன்னிலையில் காவல்துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.