சென்னை மாநகர அரசுப்பேருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏறி பயணம் மேற்கொண்டு அங்கு இருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார்.
தி.மு.க தலைவரும் மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் வருடம் மே 7ஆம் தேதி பதவியேற்றது. அந்த வகையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இன்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு முதலைமச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தன் காரை நிறுத்திவிட்டு சென்னை ஆர்.கே. சாலையில் மாநகரப் பேருந்தில் ஏறிபயணம் மேற்கொண்டார். அங்கு உள்ள பெண்களிடம் “இலவச பேருந்து பயணம்” தொடர்பாக கேட்டறிந்தார்.
இத்திட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கூறிய பெண்கள், சாதாரணக் கட்டணப்பேருந்துகளின் எண்ணிக்கையானது குறைவாகவே இயக்கப்படுகிறது என கூறினர். அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வர் பதிலளித்தார். அதன்பின் நடத்துனரிடமும் பேருந்து வழித்தடம் தொடர்பாக கேட்டறிந்தார். அத்துடன் பெரம்பூர் – பெசன்ட் நகர் போகும் “29சி” பேருந்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.