ஆட்டோ-ஜீப் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு பகுதியில் வசிக்கும் பிரவீன் என்பவர் மேலப்பட்டியிலிருந்து ஆட்டோவில் கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு குமணன்தொழு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குமணன்தொழு சாலை அருகில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மேலப்பட்டி பகுதியில் வசிக்கும் மாரியம்மாள் என்பவர் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் மாரியம்மாளை உடனடியாக மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஆட்டோவில் சென்ற மேலப்பட்டி பகுதியில் வசிக்கும் தங்கப்பிள்ளை, பழனியம்மாள், லட்சுமி, முத்துமாரியம்மாள், ஆட்டோ டிரைவர் பிரவீன், ஜீப்பில் வந்த குமணன்தொழு பகுதியில் வசிக்கும் பேயாண்டி உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 8 பேரையும் உடனடியாக மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜீப் டிரைவர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.