கோழியை துரத்திச் சென்ற மாணவி தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் அடுத்துள்ள ராஜபாளையத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகள் பவதாரணி. இவர் அவிநாசியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் நேற்று கோழியை பிடிக்க முயன்றபோது கோழி சிக்காமல் ஓடி இருக்கின்றது. கோழியை துரத்திக்கொண்டே பவதாரணியும் பின்னாலேயே ஓடி உள்ளார். அந்தக் கோழி அங்குள்ள 40 அடி உள்ள தனியார் கிணற்றின் அருகே சென்றுள்ளது. அதை பிடிப்பதற்காக மாணவி சென்றபொழுது தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
அப்போது கிணற்றிலிருந்த துளை கல்லை பிடித்து சத்தம் போட்டதையடுத்து அங்கு சென்று கொண்டிருந்த பவதாரணியின் உறவினர் ஒருவர் கிணற்றில் குதித்து பவதாரணியை மீட்டு திட்டில் உட்கார வைத்திருக்கின்றார். இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மாணவி மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற இருவரையும் பத்திரமாக மீட்டார்கள்.