லஞ்சம் வாங்கிய உதவி கமிஷனர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் கடந்த 2008-ம் ஆண்டு தனது மனைவியுடன் சேர்ந்து ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு குணசேகரன் திருப்பூரில் உள்ள நிறுவனத்தை மூடினார்.
இந்நிலையில் குணசேகரன் நிறுவனத்திற்கான கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான 2 சதவீத வரியை வணிக வரித்துறைக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தார்.
இதற்காக குணசேகரன் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிக வரி அலுவலகம் உதவி கமிஷனர் ஜெயகணேசன், பெண் எழுத்தர் ரத்னா ஆகியோரை தொடர்பு கொண்டு சி படிவம் மூலமாக நிலுவை தொகையை செலுத்துவது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நிலுவையில் உள்ள ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 572 செலுத்துமாறு கூறினார்கள். இதனால் குணசேகரன் அந்த தொகையை செலுத்தி, வரி நிலுவையில்லா சான்றிதழ் வழங்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் உதவி கமிஷனர் ஜெயகணேசன் வரி நிலுவையில்லா சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று குணசேகரனிடம் கூறியுள்ளார்.
அதற்கு குணசேகரன் தன்னால் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜெயகணேசன் ரூ.7 லட்சமும், எழுத்தர் ரத்னா ரூ.2 லட்சமும் குணசேகரனிடம் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குணசேகரனிடம் காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
இதனையடுத்து குணசேகரன் நேற்று மாலை வணிகவரி அலுவலகத்திற்கு சென்று உதவி கமிஷனர் ஜெயகணேசனிடம் ரூ.7 லட்சத்தையும், எழுத்தர் ரத்னாவிடம் ரூ.2 லட்சத்தையும் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த பணத்தை வாங்கி பையில் வைத்துள்ளனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உதவி கமிஷனர் ஜெயகணேசன் மற்றும் எழுத்தர் ரத்னா ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.9 லட்சம் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.