தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் காவல்துறையினர் பண்ருட்டி டைவர்ஷன் சாலை பகுதியில் சோதனை செய்தனர். அதில் அதே பகுதியில் வசித்த ஜியாவுதீன் (48) என்பவரது வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் விற்பதற்காக சாராயத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராய வியாபாரி ஜியாவுதீனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைதான ஜியாவுதீன் மீது 5 திருட்டு வழக்குகள், ஒரு கொலை வழக்கு, 12 சாராய வழக்குகள் என மொத்தம் 18 வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதனால் அவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுப்பிரமணியன் ஜியாவுதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள ஜியாவுதீனிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.