பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் தனது 10 மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக இந்த பெண் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் அயாத் பாஷா என்பவர் புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து ஆவண சோதனைக்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அதிகாரி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
மேலும் ஆவணங்கள் சரியாக இல்லை. எனவே நாளை மீண்டும் வருவேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு இரவு நேரத்தில் அந்த இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நேற்று மீண்டும் அதிகாரி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்தப் பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அயாத் பாஷாவை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அயாத் பாஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.