புலி திடீரென சாலையை கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது அங்கு வாழும் வன விலங்குகள் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றன. தற்போது சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காரில் சுற்றுலா பயணிகள் சிலர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புலி ஒன்று திடீரென சாலையை கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுவதாவது, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது எனவும், வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.