குடும்ப தகராறில் தீக்குளித்த தாயை காப்பாற்ற சென்ற மகனும் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் சேவியர்(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செந்தில்(35), மாரி(33) என்ற 2 மகன்களும், ராணி(32) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் திருமணமான ராணி தனது தாய் வீட்டின் மேல் தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தாய்க்கும், மகளுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த ராணி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தாய், தந்தை, சகோதரன் மாரி ஆகியோர் மீது ஊற்றியுள்ளார். அப்போது கோபமடைந்த தேவகி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரி தனது தாயை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் தீ பற்றியது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேவகி பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின் மாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.