தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா காரணமாக அரசு உள்ள நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிபந்தனையின் அடிப்படையில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி அளிக்க முடிவு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
அதனை தொடர்ந்து நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர், தகுதியற்றவர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இருப்பினும் இதில் தகுதி இருந்தும் நாங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறி பலரும் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் அனைவரது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஆராய நகை கடன் தள்ளுபடி பெற தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தள்ளுபடி பெயர் பட்டியலில் இல்லாதோர் மனுதாக்கல் செய்யலாம் என்று அரசு தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பொது நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியல் மாவட்ட இணையதளத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கடன் தள்ளுபடி பெற தகுதி இருந்தும் பட்டியலில் இடம் பெறாதவர்கள் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர், நாமக்கல், திருச்செங்கோடு சரக துணை பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரத்துடன் மே 12ஆம் தேதிக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் பயன்படுத்திக் கொண்டு கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் மேல்முறையீடு செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.