உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பாராசூட் தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்து பாருங்கள். அதில் எந்த ஒரு முக்கும் இருக்காது. வட்ட வடிவத்தில் தான் இருக்கும். இது ஏன் வட்ட வடிவத்தில் இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா…? பார்ப்போர் கண்களுக்கு கவர்ச்சியாக இருப்பதற்காக மட்டும் இந்த பாட்டிலை வட்ட வடிவத்தில் செய்யவில்லை. இதன் பின்னணியில் பெரிய வரலாறே இருக்கிறது. 1970களில் எல்லா எண்ணெய்களும் டின்களில் வைத்துதான் விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 லிட்டர் 15 லிட்டர் டின்களில் வைத்து விற்கப்படுவதால் இதனுடைய விலையும் அதிகமாக இருக்கும். இதனை ஏழை மக்களால் வாங்க முடியாது.
இதனைப் புரிந்துகொண்ட பாராசூட் கம்பெனி தங்களுடைய எண்ணெய்யை சிறிய பாட்டிலில் போட்டு விற்றால் அதிகமானோர் மட்டுமல்லாமல் ஏழ்மையில் இருப்பவர்களாலும் வாங்க முடியும் என நினைத்திருக்கிறார்கள். இந்த யோசனையை எண்ணெய் விற்பனையாளர்கள் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் எண்ணெய்யை பாட்டிலில் போட்டு மளிகை கடையில் வைத்தால் அங்கு இருக்கும் எலிகள் அந்த பாட்டிலை கடிக்கும். இதனால் எண்ணெய் கசிந்து மற்ற பொருள்களும் வீணாகும் என்பதால் இதனை வாங்க அவர்கள் மறுத்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பாராசூட் கம்பெனி இதற்கு தீர்வு காண எண்ணியது. இதனால் பாராசூட் பாட்டிலினுடைய வடிவத்தை வட்டமாக மாற்றியுள்ளது. இப்போது எலிகளால் அந்த பாட்டிலை கடிக்கவும் முடியாது பிடிக்கவும் முடியாது. பொதுவாக கடைகளில் இருக்கும் மற்ற எண்ணெய்களை டின்களில் வைத்து விற்கும்போது பாராசூட் எண்ணெய் மட்டும் பளிச்சென்ற பாட்டிலில் வைத்துள்ளதால் விற்பனை அமோகமாக இருந்தது. பாராசூட் எண்ணெய் நிறுவனம் செய்த இந்த புத்திசாலித்தனமான காரியத்தால் ஏழ்மையில் இருப்பவர்களாலும் இதனை வாங்க முடிந்தது.