வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்” என்று பேசினார்.
அதற்கு துரைமுருகன் பதிலளிக்கையில், “வேலூர், அணைக்கட்டுத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-வுக்கு யார் நிற்பது என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கும் ஸ்டாலினுக்கும்தான் இருக்கிறது. இப்போதைய எம்.எல்.ஏ-க்களை `நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்’ என்று என் மகன் கதிர் ஆனந்த் பேசியிருக்கிறார். நீ சொல்வதைப்போல் சட்டமன்றத் தொகுதியை நிரந்தரமாக்கிவிட்டால் அவர்கள் எங்களை மதிப்பார்களா? எம்.பி சீட்டுக்கு உன்னை முடிவுசெய்வதற்காக நான் பட்ட பாடே இன்னும் தீரவில்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் பலகாலமாக ஊழல் நடைபெறுகிறது. ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், திமுக உறுப்பினர்களுக்கு நிதி கொடுக்க முடியாது என அமைச்சர் கருப்பணன் பேசியது குறித்து கேள்விக்கு, “அமைச்சர் கருப்பணன் பேசியது தவறு, திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என்று கூறுவது என்ன அவரது அப்பா வீட்டு பணமா அரசாங்கத்தின் பணம் ஆகையால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.