செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர்(47). இவர் குன்னவாக்கம் ஏரிக்கரை அருகில் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். இவருக்கு கல்யாணமாகி இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவர் கடந்த 6-ம் தேதி இரவு தொழிற்சாலையில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு நீண்ட நேரமாகி வரவில்லை என்று அவரது தந்தை முத்து தொழிற்சாலைக்கு சென்று பார்த்தார். அப்போது மனோகர் இரண்டு கால்கள் கட்டப்பட்டு முகத்தில் கல்லால் தாக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனே செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து மனோகரனை யார் கொலை செய்தார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டுள்ளார்? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.