மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை மத்திய அரசு வழங்க மறுத்துள்ளது. அதாவது கடந்த 2003-ம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தது வருகின்றனர். தற்போது இந்த கோரிக்கையானது அரசு ஊழியர்களிடையே வலுப்பெற்று வருகிறது.
இதன் காரணமாக சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் பணத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜஸ்தான் அரசு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. ஆனால் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை வழங்க முடியாது என பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.