ஆப்கானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும் என தலீபான்கள் புதிய கட்டளை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இவர்களின் ஆட்சி அமைந்ததும் ஆப்கானில் மிகக் கடுமையான பழமைவாத சட்ட திட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு பொதுமக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போல 1996 முதல் 2001 வரை கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதியளித்துள்ளனர். ஆனால் அதன்படி நடக்காமல் பெண்களுக்கு ஏராளமான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் தலீபான்கள் விதித்துள்ளனர். இந்த வகையில் நேற்று தலீபான்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தலீபான்கள் அரசின் மந்திரி காலித் ஹனாபி வெளியிட்ட அறிக்கையின் படி, “எங்களது சகோதரிகள் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பெண்களுக்கு எதிரான பல்வேறு விதிமுறைகளை நடைமுறைபடுத்தி வருகின்றனர். பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என்று தலீபான்கள் உத்தரவிட்டனர். இங்கு பெண்கள் மேல் நிலைக் கல்வி பயிலவும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் தலீபான்களின் இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தில், அந்நாட்டை மேலும் அந்நியப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக ஆப்கானில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.