புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் பாலகிருஷ்ணனை மாநில தேர்தல் ஆணையராக அரசு நியமித்தது. இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில் தலைமைச் செயலரின் உத்தரவுப்படி, உள்ளாட்சித் துறை இயக்குநர் மூலம் புதிய மாநில தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானது.
இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக அரசு அலுவலர்கள் செயல்படுவது உரிமை மீறல் விவகாரம் எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி சபாநாயகரிடம் புகாரளித்திருந்தார். இதனையடுத்து கடந்த ஒருவாரமாக துணை சபாநாயகர் பாலன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு முன்பு அரசு செயலர், உள்ளாட்சித் துறை செயலர், உள்ளாட்சித்துறை இயக்குநர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்து வந்தனர்.
நேற்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற உரிமை மீறல் குழுவிற்கு ஆஜராக தலைமை செயலர் அஸ்வனி குமார் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கூட்டம் தொடங்க 30 நிமிடத்திற்கும் மேலானதால் அதுவரை தலைமைச் செயலாளர் கூட்ட அறைக்கு வெளியிலேயே அவர் காத்திருந்தார்.
இது அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உரிமை மீறல் குழு முன்பு தலைமைச் செயலர் அஸ்வனி குமார் ஆஜரானார். துணை சபாநாயகர் பாலன் தலைமையிலான குழுவினரின் விசாரணைக்கு அவர் விளக்கமளித்தார். ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதல் சம்பவத்தில் தற்போது தலைமைச் செயலரே உரிமை மீறல் குழு முன்பு ஆஜரான சம்பவம் புதுச்சேரி மாநில அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.