இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 1500 கோவில்களுக்கு ரூபாய் 1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் குறைபாடுகள் உள்ளதாக புகார் வந்ததால், அதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த அடிப்படையில் சட்டமன்றத்தில் உறுப்பினர் தாயகம் கவி மற்றும் மேயர் வேண்டுகோளை ஏற்று சேமாத்தம்மன் கோவிலினை ஆய்வு செய்துள்ளோம். இவற்றில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை பெரம்பூர் பகுதியிலுள்ள சேமாத்தமன் கோவிலில் குளத்தை 70 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது. 1000 ஏக்கர் அளவுக்கு நிலங்களை மீட்டெடுக்கும் பணியை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த வருடம் 1500 கோவில்களுக்கு 1000 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.