விருமாண்டி 2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் கையில் ஒரு மண்பானையை வைத்து அதில் நெருப்பு பற்ற வைத்து இருப்பார்கள். ஒரு சிலர் கையை வைத்து ஊதி கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் தேனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் ஈசல் புற்று உள்ள இடங்களில் அதற்காகவே செய்யப்பட்ட ஒரு பொடியை புற்றுகளின் மேல் தூவுவார்கள்.
மேலும் விளக்கு ஒளியையும் காட்டுவார்கள். இதனால் பொடியின் வாசனைக்கும், விளக்கு ஒளிக்கும் புற்றின் உள்ளே இருக்கும் ஈசல் அனைத்தும் வெளியே வரும். அதை பிளாஸ்டிக் பைகளில் பிடித்து சாக்குகளில் போட்டு உதறும் போது அதனுடைய இறக்கைகள் பிரிந்துபோகும். பின்னர் அதனை காய வைத்து சமைத்து உண்கிறார்கள். இதில் அதிக மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது.
எனவே விருமாண்டி படமும் தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எடுக்கப்பட்டதால் கமலஹாசன் இதனை இந்த படத்தில் காட்டியுள்ளார். இதில் வரும் “ஈசலை போல் நான் பறந்து வெளிச்சத்தை தேட” என்ற பாடலும் கூட ஈசலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.