பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செடிமுத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியதாவது, செடி முத்தூர் காலனியில் 70 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த காலனியில் பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடம் என்று எதும் இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே இதன் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புதிய கழிப்பிடம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வேட்டைக்காரன் புதூரில் வசித்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி உடலில் இலை பூக்களை கட்டிக்கொண்டு அளித்த மனுவில் கூறியதாவது, வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுர்வேத, சித்தா பிரிவு வளாகத்தில் பழமையான மரங்கள் அமைந்துள்ளன. இந்த மரத்தில் இரவு நேரங்களில் பறவைகள் வந்து அமருகின்றன. பறவைகள் வந்து அமராத மரங்களை அதிகாரிகள் வெட்டினார்கள். மேலும் நல்ல நிலையில் இருக்கின்ற மரங்களை மோசமாக இருக்கிறது என்று அதிகாரிகள் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.