Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்ட இருந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம்… கலெக்டர் தகவல்…!!!

கடலூரில் புதிதாக கட்ட இருந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள்,தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால் பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம் அருகே பூமார்க்கெட், ரயில் நிலையம் உள்ளதால் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்திற்குள் காலை, மாலை வந்து செல்வதால் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை தவிர்ப்பதற்கு கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி புதிய கலெக்டர் அலுவலகம் மேற்கு பகுதியில் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 18 1/2 ஏக்கர் நிலம் தற்போது உள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடந்த வருடம் ஜூன் மாதம் 26ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரூபாய் 36 கோடி நிதி ஒதுக்க நிர்வாகமும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்படி புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையிலிருந்து வந்த அதிகாரிகள் பேருந்து நிலையம் அமைப்பதற்கான வரைபடம் தயாரித்தல், நில அளவீடு பணிகளை செய்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து ஆணையாளர் தலைமையில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர், அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்தால் வாகன போக்குவரத்து எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்தனர். மாநகரங்களில் பல இடங்களில் வாகன கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பேருந்து நிலையம் இருந்தால் அதை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான சூழல் இங்கு இல்லை. ஆகவே புதிய பேருந்து நிலையம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்து வருகின்றோம் என்றார்.  அதற்கான இடத்தை விரைவில் தேர்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |