ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கரே தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் தாக்குதல் அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி புல்வாமாவின் அவந்திபோரா என்ற பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கமாண்டர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் பாரமுல்லாவின் ஆந்தர்கேம் பட்டான் என்ற பகுதியில் (Andergam Pattan area of Baramulla) லஷ்கரே தொய்பா அமைப்பின் பயங்கரவாதியான சாஜித் பரூக் தர் (19 வயது) பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று அவனை சுற்றிவளைத்து இன்று அதிகாலை கைது செய்தனர். இந்த தகவலை ட்விட்டர் தளத்தில் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.