குண்டாறு அணை சேதமடைந்து காணப்படுவதால் விவசாயிகள் அணையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அருகே உள்ள கண்ணுபுளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது. இந்த அணை 36.10 அடி கொள்ளளவை கொண்டது. இந்த அணையால் சுற்றியுள்ள தஞ்சாவூர் குளம், நிறை குளம், கீழக்கொட்டாகுளம், மேலக்கொட்டாகுளம் உள்ளிட்ட 12 குளங்கள் பயன்பெருகின்றது. இதனால் அங்குள்ள விவசாயிகளும் மக்களும் பயன் பெற்று வருகின்ற நிலையில் இந்த அணை தற்போது சேதமடைந்து காணப்படுகின்றது. இந்த அணையின் உள்பக்கம் உள்ள சுவரின் கற்கள் பெயர்ந்து விழுந்து தண்ணீரின்றி தரிசு நிலமாக காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் இதுகுறித்து கூறியுள்ளதாவது, “குண்டாறு அணை தண்ணீரின் மூலமாக நாங்கள் பயன்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அணையில் சேதம் அடைந்திருக்கின்றது. இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க இருப்பதால் சேதமடைந்து காணப்படும் அணையின் உட்பக்க சுவர் பகுதியை பொதுப்பணித் துறையினர் உடனடியாக சீரமைத்து தரவேண்டும். மேலும் அணை தற்பொழுது வறண்டு காணப்படுவதால் எளிதாக சீரமைப்பு பணியை செய்ய முடியும்” என கூறியுள்ளனர்.