மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் பூங்காவை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பாம்பு அதற்குள் பூங்காவிற்கு சென்று பதுங்கியது. இதனை அடுத்து தீயணைப்புத்துறையினர் புதருக்குள் பதுங்கியிருந்த பாம்பை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். அதன்பிறகு பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.