பிரபல நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை காவியா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சென்ற 2017-ஆம் வருடம் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பல்சர் சுனில் இதற்கெல்லாம் காரணம் நடிகர் திலீப் என கூறியதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன்பின் திலீப் ஜாமீனில் வெளிவந்தார். சில ஆடியோ ஆதாரங்களில் போலீசார் விசாரணை செய்தபோது காவ்யா மாதவன் பெயர் இடம்பெற்றதால் காவ்யா மாதவனுக்கும் பல்சர் சுனிலுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.
எஸ்.பி.மனோசந்திரன் மற்றும் துணை எஸ்.பி பைஜூ தலைமையில் காவ்யா மாதவனிடம் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடந்தது. இதையடுத்து இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானது. இதை தொடர்ந்து போலீசார் காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் காவ்யா மாதவன் தனது வீட்டில் வைத்து விசாரிக்கும் படி கேட்டுக் கொண்டதையடுத்து திங்கட்கிழமை மதியம் காவியாவின் வீட்டிற்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். இதற்கு முன்னதாக திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சுவாரியாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.