ஈரோட்டில் கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை அடுத்த கே.எஸ் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட ஊர்மக்கள் உடனடியாக ஈரோடு மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட போது, தலையின் பின்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் கத்திக்குத்து வாங்கிய வாலிபர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.
மேலும் சடலத்தின் அருகில் இருந்த கற்களில் ரத்த காயங்கள் இருந்தன. மது பாட்டில்களும் ஆங்காங்கே கிடந்தன. இதனால் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஊர் மக்களிடம் விசாரணை மேற்கொள்கையில், இப்பகுதியில் தினந்தோறும் இளைஞர்கள் மது பாட்டிலுடன் வந்து மது அருந்துவது வழக்கம் யார் யார் வந்து செல்கிறார் என்பது எல்லாம் தெரியாது.
இதனால் எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இப்போது கொலை சம்பவம் நடந்துவிட்டது. ஆகையால் இனிமேலாவது காவல்துறையினர் இப்பகுதியில் ரோந்து பணி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கொலை செய்தவர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.