அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதனை அசானி புயல் என்று அழைத்தனர். இந்தப் புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் மேற்கு வங்காளத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.