அண்டைநாடான இலங்கையில் 75 வருடகால வரலாற்றில் இல்லாத அடிப்படையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது விட்டது. அதுமட்டுமல்லாமல் அன்னிய செலாவணி கரைந்துபோனது, இறக்குமதி நின்று போனது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையானது கேள்விக் குறியாகியது. இலங்கையில் நிலவியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று அதிபரான கோத்தபயராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், எந்தஒரு பலனும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், ஆவேசமும் மேலும் அதிகரித்த நிலையில், இதுவரையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என அடம்பிடித்து அதில் ஒட்டிக்கொண்டிருந்த மகிந்த ராஜபக்சே (76) நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து பதவி விலகினார்.
அதே சமயத்தில் அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதில் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன் தோட்டாவிலுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே போன்றோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இந்த வன்முறைகளில் ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். அதன்படி வன்முறைகளில் மொத்தம் 8 பேர் இறந்தனர். அத்துடன் பல நூறு பேர் படுகாயமடைந்தனர். 217 நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில், கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து பதற்றத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்துள்ளார். இலங்கையில் நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையே மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக இலங்கையில் பரவலாக செய்திகள் பரவியது. எனினும் இத்தகவலை மறுத்துள்ள இந்திய தூதரகம், “இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை ஆகும். இந்திய தூதரகம் அதுபோன்ற தகவல்களை திட்டவட்டமாக மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளது.