தக்கலை அருகில் அனுமதி இல்லாமல் இயங்கிய கேரளா சுற்றுலா பேருந்தை சிறைபிடித்து அதிகாரிகள் ரூ 49,000 அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் திருவிதாங்கோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மூணாறுக்கு சுற்றுலா செல்ல இருந்தார்கள். இதற்கு நேற்று முன்தினம் இரவு கேரளா மாநிலத்திலிருந்து ஒரு சுற்றுலா பேருந்து திருவிதங்கோட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து தமிழகத்தில் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று அறிந்த உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒன்றுதிரண்டு கேரளா பேருந்தை சிறை பிடித்தார்கள். இதன் காரணமாக சுற்றுலா செல்ல ஆர்வத்துடன் இருந்த மாணவ மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தக்கலை காவல்துறையினர் தகவல் அளித்தனர். இத்தகவலை அறிந்து அங்கு வந்த வட்டார ஆய்வாளர் ராஜேஷ் கேரளா சுற்றுலா பேருந்துக்கு ரூ 49,000 அபராதம் விதித்துள்ளார். அதன்பின் அந்த பேருந்து அங்கிருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்று விட்டது. இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.