தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த கூட்டத்தொடரில் அண்மையில் பேசிய பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை தனிமனித துதி என கூறுமளவிற்கு புகழ்ந்து பேசியுள்ளார். அன்பிற்கு இலக்கணமாக ஆருயிர் உதயநிதி அவர்களே நீங்கள் நடித்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.. ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் அல்லவா கடந்த ஆட்சியை உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்த கெத்து… நீங்கள் தான் தமிழ்நாட்டின் சொத்து. உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன்… இதில் நீங்கள் தான் மாமனிதன். சரவணன் இருக்க பயமேன் என்பது நீங்கள் நடித்த படம்… உதயநிதி இருக்க பயமேன் என்பது தமிழக இளைஞர்களின் எண்ணம்.
நெஞ்சுக்கு நீதி படத்தின் பாத்திரம் மட்டுமல்ல… நீங்கள் நெஞ்சுக்கு நீதி அடுத்த பாகமாக மாறுகிறீர்கள். மாமன்னன் நல்ல தமிழ்நாட்டின் அடுத்த மாமன்னன் தாங்கள் தான் இவ்வாறு உதயநிதி அவர் நடித்த படங்களுடன் தொடர்புபடுத்தி இது எங்கள் சட்டமன்றமா? இல்லையெனில் திமுக பொதுக்கூட்டமா ? என கேட்கும் அளவிற்கு எம்எல்ஏ பிரபாகரன் புகழ்ந்து பேசியதை திமுக உடன் பிறப்புகளை ரசித்தார்கள் என தெரியவில்லை. ஆனால் பொதுவெளியில் பாஜக ஆதரவாளர்கள் வலதுசாரிகள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல இந்த விஷயத்தை வைத்து திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பிரச்சினையை பற்றி எவ்வளவு விரைவாக, தெளிவாக, அழகாக, அழுத்தமாக பேசுகிறார்கள் என பாருங்கள்.
ஒருவரை தோளில் சுமப்பது மட்டுமே சுயமரியாதைக்கு இழுக்கு என யார் சொன்னது? பதவி வேண்டி, பணம் வேண்டி, அதிகாரம் வேண்டி, ஆதாயம் வேண்டி நேற்று பொதுவாழ்க்கைக்கு வந்தவரை சேப்பாக்கம் சேகுவேரா ஆக்கும் சில்லறைகளுக்கு மத்தியில் கக்கனும்,காமராஜரும் ஆளுமை செலுத்திய சட்டசபையில் ‘நீ நடித்த படம் கெத்து நீதான் தமிழகத்தின் சொத்து’ என வாரிசுகளை தலையில் தூக்கி சுமக்கும் அற்ப பதர்களுக்கு மத்தியில் தான் வணங்கும் கடவுளை கடவுளுக்கு நிகராக மதிக்கும் குருவை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூக்கி சுமக்கும் அடியார்களின் சுயமரியாதை எந்த வகையிலும் குறைந்து போய் விடப் போவது இல்லை. இந்த ரீதியில் சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகளால் வலம் வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கும் இடம் தரலாமா? என்பதை திமுக தலைமை சிந்தனை செய்ய வேண்டும்.
மேலும் சினிமாவில் பிஸியாக இருக்கும் உதயநிதியை எம்எல்ஏ என்று தகுதியோடு ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டால் அதை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக செய்து விட்டு போகலாம். மாறாக அவருடைய சேப்பாக்கம் தொகுதிக்கு மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கு தேவை உதயநிதி துணை முதல்வராக வேண்டும். அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்றால் கட்சியில் மற்றவர்களை வைத்து பேச வைத்து ஆட்சி அதிகாரத்திற்குள் வர உதயநிதிக்கு ஏதோ தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லாதது, போலவும் எம்எல்ஏக்கள் மற்றும் உடன்பிறப்புகளின் கட்டாயத்தின் பெயரில் தான் அவர் அமைச்சராக வேண்டி இருப்பது என்பது போல பிம்பத்தை உருவாக்கும் தன்மை ஆட்சி, அதிகாரத்திற்கு கொண்டு வந்தபோது கருணாநிதி பின்பற்றிய ஐடியா.
இந்த ஓல்டு டெக்னிக் இன்றைய டிஜிட்டல் காலத்தில் எடுபடாது என்பதை ஸ்டாலின் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.”யாரும் என்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் சட்டப்பேரவையில் ஸ்டாலின் தங்களுக்கு அளித்த அறிவுரையை திமுக எம்எல்ஏக்களும் மறந்துவிடக் கூடாது. மாற்றாக, தங்களது விஸ்வாசத்தை காட்டுவதற்காக சபையில் உதயநிதியை அடுக்குமொழியில் புகழ்ந்து பேசுவதை திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து செய்தால், அது கட்சிக்கே பொதுவெளியில் கெட்டப்பெயரை ஏற்படுத்த உடன்பிறப்புகளே வாய்ப்பு கொடுப்பது போல் ஆகிவிடும்.